உலகம்புதிய செய்திகள்

தாய்லாந்து களியாட்ட விடுதியில் பாரிய தீ விபத்து; 27 பேர் பலி – 63 பேர் காயம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு களியாட்ட விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததுடன், 63 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூலை 13) தெரிவித்தனர்.மேலும்  அவசர வெளியேறும் வழிகள் மறைக்கப்பட்டிருந்ததால், புகையால் மூச்சுத்திணறிய பலர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வெளியான மற்றும் ராய்ட்டர்ஸ் உறுதிப்படுத்திய காணொளியில், முதலில் விடுதியிலிருந்து அடர்ந்த புகை வெளியேறுவதும், பின்னர் கதவு பகுதியிலிருந்து திடீரென தீ வெடித்துச் சுடர்விடுவதும், அச்சத்தில் வாடிக்கையாளர்கள் அலறியபடி வெளியே ஓடுவதும் பதிவாகியுள்ளது.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் அனுடின் சார்ன்விரகுல், “27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

பாங்காக் மாநகர பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு துறையின் இயக்குநர் சுரியாசாய் ராவிவான், 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த தீ விபத்து, வடக்கு பாங்காக்கில் அமைந்துள்ள ரொங் பியர் நா லாட் பிராவ் (Rong Beer Na Lat Phrao) என்ற மதுபான விடுதியில் ஏற்பட்டது. இந்த பகுதி முக்கிய நகர ரயில் இணைப்புகள், இரண்டு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் சதுசாக் வார இறுதி சந்தை அருகே அமைந்துள்ளது.

ஆரம்ப விசாரணையில், கூரையில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர் தப்பியவர்களின் தகவலின்படி, விடுதியின் முன்புற மேடைப் பகுதியில் தீ முதலில் பரவி, பின்னர் வேகமாக முழுக் கட்டிடத்திற்கும் பரவியதால், பலர் பின்புறத்தில் இருந்த சமையலறை மற்றும் கழிப்பறை பகுதிகளுக்கு ஓடிச் சிக்கியுள்ளனர்.

பாங்காக் ஆளுநர் சட்சார்ட் சிட்டிபுண்ட், “இரண்டு அவசர வெளியேறும் வழிகள் இருந்தன. சமையலறை அருகிலிருந்த வழியில் பீர் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு வெளியேறும் வழியையும் ஒரு மேசை மறைத்திருந்ததால் மக்கள் வெளியேற முடியவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்ட பிறகே தீ விபத்திற்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிகாலை வரை மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றியதுடன், உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படுவதற்காக தடயவியல் குழுவினர் ஆதாரங்களை சேகரித்தனர்.

சம்பவ நேரத்தில் மேடையில் இசை நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த இசைக்குழு உறுப்பினர் ஒருவர், “மின்விளக்குகள் சில நொடிகள் அணைந்ததும் அறை முழுவதும் புகை நிரம்பியது. அதன்பின் பெரிய வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியது. வெடிப்புக்குப் பிறகு யாரும் ஓட முடியவில்லை; பெரும்பாலானோர் தரையில் விழுந்தபடி உதவி கேட்டனர். நான் மேடையிலிருந்து சுமார் ஐந்து மீட்டர் தூரம் ஓடி கதவை அடைந்தேன். அப்போது முழுக்க இருட்டாகவும், புகையால் ஆக்சிஜன் இல்லாத நிலையும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button