இலங்கை

நீர்கொழும்பு சிறை மோதல்; பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர்!

இரும்புக் கதவை உடைத்து, ஆயுதங்களுடன் வெளியேற முயற்சித்த கைதிகள்

இலங்கை நீர்கொழும்பு  சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இரு போட்டி குழுக்களுக்கிடையிலான மோதலால் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

எனினும், விசாரணைகள் இன்னும் தொடர்வதால் இறுதியான எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஜூலை 5 ஆம் திகதி இரு கைதிக் குழுக்களுக்கிடையில் ஆரம்ப மோதல் ஏற்பட்டதில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 35 பேர் காயமடைந்தனர். அன்றைய தினம் மாலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும், மறுநாள் காலை,காலை உணவுக்குப் பின்னர் கைதிகள் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லத் தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் வன்முறை வெடித்தது.

சிறைக்குள் போதைப்பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க சிறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கிய கைதிகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இவ்வாறு தகவல் வழங்கும் கைதிகள் குற்றவியல் குழுக்களின் தாக்குதலுக்கு அடிக்கடி இலக்காகின்றனர் என்றும், இதுவும் விசாரணையில் ஆராயப்பட்டு வரும் சாத்தியமான காரணங்களில் ஒன்றாகும்

 

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இவை ஆரம்பகட்ட கண்டறிதல்கள் மட்டுமே, நடைபெற்று வரும் விசாரணைகளும் சம்பவத்தை ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையும் கிடைத்த பின்னரே இறுதியான முடிவுகள் எடுக்கப்படும்.

வன்முறையின் போது திட்டமிட்ட வகையில் செயல்பட்ட ஒரு சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குழு, சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் நுழைவதைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகளை செயலிழக்கச் செய்யும் நோக்கில் கண்காணிப்பு (CCTV) கமராக்களையும் உடல் பரிசோதனை ஸ்கேனரையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.

இந்த வன்முறையில் அனைத்து கைதிகளும் ஈடுபடவில்லை என்றும், காயமடைந்தவர்களில் பலர் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவி கைதிகள்.

நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற ஆயுதமற்ற சிறை அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், தங்களது சக ஊழியர்களைக் காப்பாற்ற முயன்றபோது பல அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கைதிகள் இரும்புக் கதவு ஒன்றை உடைத்து மற்றொரு வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறியதாகவும், அவர்கள் சிறையிலிருந்து தப்பியிருந்தால் அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

அத்துடன், கலவரத்தின் போது சில கைதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button