இலங்கை

சட்டத்தை மதிக்கும் சமூகத்திலிருந்தே சிறந்த தலைவர்கள் உருவாகின்றனர் – பிரதி சபாநாயகர்

சட்டத்தை மதிக்கும், ஒழுக்கமிக்க மற்றும் நாகரிகமான சமூகத்திலிருந்தே சிறந்த தலைவர்கள் உருவாவதாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

 

 

 

ஒழுக்கம், சட்டத்தை மதிப்பது மற்றும் நாகரிகப் பண்புகளைக் கொண்ட நபர்களை மக்களின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்து அனுப்புவது மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

 

 

நுகேகொட புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் (30) ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

நுகேகொட புனித ஜோசப் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும், ஜனநாயக ஆட்சிச் செயன்முறை தொடர்பான புரிதலையும் வழங்கும் நோக்கில், கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர், ஆசிரியர்கள் தங்களது முழுமையான அர்ப்பணிப்பையும் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்காக செலவிடுகின்றனர் என்பதால், அவர்களுக்கு எப்போதும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் எந்த உயர்ந்த நிலையை அடைந்தாலும், கல்வி கற்பித்த ஆசிரியர்களை மறக்காமல் மதித்து, அவர்களுடன் தொடர்பைப் பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

மேலும், ஒருவர் மேற்கொள்ளும் தொழிலை மதித்து, அதில் திருப்தியுடனும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு, தத்தமது துறைகளில் திறமையாளர்களாக உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

 

 

மாணவர்கள் பெற்றோரைப் பின்பற்றி வளர்வதால், நன்நடத்தை மற்றும் ஒழுக்கத்தை முன்மாதிரியாக வெளிப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என்றும், இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் சட்டத்தை மதிக்கும் பொறுப்புமிக்க குடிமக்களாக உருவாக உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கருத்துரைத்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாள் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் விளக்கமளித்தார். கல்வித் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், கொழும்பிற்கு வருகை தராமல், தாங்கள் வசிக்கும் பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாகவே அவ்வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகர் தெரிவு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் என்பன இடம்பெற்றன. அமைச்சுப் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்கள் தமது அமைச்சுக்களின் ஊடாக பாடசாலையில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகளை சபையில் முன்வைத்தனர்.

 

 

 

இலங்கைப் பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பாக பாராளுமன்றத்தின் பிரதி பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா மதுபாஷிணி புலத்சிங்கள மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

 

 

 

இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பிரதி சபாநாயகர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவில், நுகேகொட புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் அதிபர் டபிள்யூ.ஆர்.ஆர். சில்வா நன்றியுரையாற்றினார்.

 

 

 

ஜனாதிபதி செயலகமும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் தொடரின் மேலும் ஒரு கட்டமாக இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, பாராளுமன்றத்தின் மனிதவள அபிவிருத்திப் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சூலா ஹேரத், புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button