
இலங்கையிலுள்ள முறைசாரா துறையைச் சேர்ந்த சுமார் 6 மில்லியன் ஊழியர்களில், குறைந்தபட்சம் 5 மில்லியன் ஊழியர்களையாவது இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்திற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகப் வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சின் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில், அரச துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளும், தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி நன்மைகளும் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய ஓய்வூதியத் திட்டமும் நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தத் தரப்பினரைத் தவிர, சுமார் 6 மில்லியன் மக்கள் முறைசாரா வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை சமூக பாதுகாப்பு சபை அவர்களில் சுமார் 3 மில்லியன் பேரை ஏற்கனவே இதில் பதிவு செய்துள்ளது. எனினும், தற்போது சுமார் 1.6 மில்லியன் உறுப்பினர்கள் மட்டுமே முறையாகப் பங்களிப்புப் பணத்தைச் செலுத்தி வருகின்றனர்.
எமது திட்டம், இந்த ஓய்வூதியக் காப்புறுதியை குறைந்தபட்சம் 5 மில்லியன் முறைசாரா துறை ஊழியர்களுக்காவது விரிவுபடுத்துவதாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க ஓய்வூதியப் பலன்களுக்கு தகுதி பெறாத, 18 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட நபர்களுக்காக “சுரக்கும” ஓய்வூதியத் திட்டம் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபை அண்மையில் தெரிவித்துள்ளது.
உறுப்பினர்கள் தங்களின் பங்களிப்புத் திறனுக்கு ஏற்ப ஓய்வூதியத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.
மாதாந்த ஓய்வூதியம், ஊனமுற்றோருக்கான காப்புறுதி மற்றும் மரணச் சடங்கு உதவித்தொகை போன்ற பலன்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நெகிழ்வான கட்டணத் திட்டங்கள் மூலம் பங்களிப்புப் பணத்தைச் செலுத்த முடியும்.
இது குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் 011288 6088 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 0771443044 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகவோ தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
.





