
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், முதன்முறையாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாளை (மே 27) டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செல்லும் அவர், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளார். அத்துடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக கடந்த மே 10 ஆம் திகதி விஜய் பதவியேற்றார். அவருடன் ஆரம்பத்தில் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர், இரு கட்டங்களாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது அமைச்சரவை முழுமையடைந்துள்ளது.
அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் காரணமாக முதலமைச்சர் விஜய்யால் இதுவரை வெளிமாவட்ட அல்லது வெளிமாநிலப் பயணங்கள் எதையும் மேற்கொள்ள முடியாமல் இருந்தது.
தற்போது அமைச்சரவை முழுமையடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்காகத் தனி வானூர்தி மூலம் அவர் நாளை டெல்லி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





