
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை தடையின்றி மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சீனாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போதே மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி ஷி ஜின்பிங் இரண்டு முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
ஹோர்முஸ் நீரிணையை இராணுவமயமாக்குவதற்கும், அந்த நீரிணையைப் பயன்படுத்துவதற்கு வரி அல்லது கட்டணம் அறவிடும் எந்தவொரு முயற்சிக்கும் சீனா தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
ஹோர்முஸ் நீரிணை மீதான தனது தங்கியிருப்பைக் குறைப்பதற்காக, எதிர்காலத்தில் அமெரிக்காவிலிருந்து அதிகளவில் மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய சீனா ஆர்வம் காட்டியுள்ளது.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானை வலியுறுத்தவும் சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என ட்ரம்ப் இந்தச் சந்திப்பிற்கு முன்னர் எதிர்பார்த்திருந்தார்.
உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள சூழலில், இந்த இரண்டு வல்லரசுத் தலைவர்களின் சந்திப்பு சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது





