
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் மக்கள் சந்திப்புப் பயணத்தை நடத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் பெருமளவிலான மக்கள் திரண்டனர். எனினும், பல இடங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்குக் காவல்துறையின் அனுமதி கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய மூன்று முறை திட்டமிடப்பட்டும், அனுமதி கிடைக்காததால் அது சாத்தியமற்றுப் போனது. இதேபோன்று பல மாவட்டங்களிலும் பிரசாரம் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. இவ்வாறான சவால்களுக்கு மத்தியில், தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மகத்தான வெற்றியைப் பதிவு செய்ததுடன், முதலமைச்சராக விஜயும் பதவியேற்றுள்ளார்.
சட்டமன்றத்தில் பதவியேற்பு மற்றும் நம்பிக்கை தீர்மானத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், அடுத்த கட்டமாக மக்கள் சந்திப்புப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மக்களைச் சந்தித்த அவர், தற்போது முதலமைச்சராக மக்களைச் சந்திக்கவுள்ளதோடு, இதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் பிரசாரத்தின் போது விடுபட்ட மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மக்களுக்கு நன்றி கூற முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளார்.
அத்துடன், இந்தச் சந்திப்புகளின் போது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
மக்கள் சந்திப்புப் பயணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நிர்வாகிகளுடன் பனையூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் விரைவில் நடத்தவுள்ளார்.
இதன் பின்னரே பயணத் திட்டம் இறுதி செய்யப்படவுள்ளது. அத்துடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், அதிகாரிகளுடனும் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடல்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.





