
இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பாகங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்குத் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
குறிப்பாக, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேவேளை சபரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





