இலங்கை

இலங்கைக்கு மாலைதீவில் காணி – முக்கிய 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், மாலைதீவு ஜனாதிபதி மொஹட் முய்சு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர், மே 4 முதல் மே 6 வரை இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்

2023ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு ஜனாதிபதி மொஹமட் முய்சு மேற்கொள்ளும் முதலாவது இலங்கை விஜயம் இதுவாகும்.

 

இதற்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

 

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, காப்பகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கைச்சாத்தாகின.

மேலும், இரு நாடுகளின் தூதரக உறவுகளைக் கௌரவிக்கும் வகையில், கொழும்பில் உள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்துக்கு காணி ஒதுக்கீடும், அதற்குப் பதிலாக மாலைதீவில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு காணி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

 

அத்துடன், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மீன்பிடி, விவசாயம், சுற்றுலா, காணி விற்பனை மற்றும் நகர அபிவிருத்தி போன்ற துறைகளில் முதலீடு செய்ய மாலைதீவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவாலான காலநிலை மாற்றம் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.

 

அத்துடன், அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தக் காலங்களில் மாலைதீவு அரசாங்கம் வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கும் ஜனாதிபதி திஸாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதேவேளை, ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு, கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மே 6 ஆம் திகதிவரை விசேட போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button