
வெசாக் மற்றும் பொசொன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் தானசாலைகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்அறிவித்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு 9 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தானசாலை ஏற்பாட்டாளர்கள் அந்தந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரிடம் தமது விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைமைகளை உறுதிப்படுத்த அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்வார்கள்.
தயாரிக்கப்பட்ட உணவுகளை நான்கு மணி நேரத்திற்குள் பரிமாற வேண்டும்.
கைகளைக் கழுவும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, உணவைக் கையாளும்போது கையுறைகள் அல்லது முறையான உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
அச்சு ஊடகங்களை (செய்தித்தாள்கள்) உணவைப் பொதியிடப் பயன்படுத்துவது சுகாதார ஆபத்துகள் காரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பான குடிநீர் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் முறையான கழிவு முகாமைத்துவமும் இருக்க வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறும் நபர்களுக்கு எதிராக, 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டம் மற்றும் 2011 ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.





