
மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்குமாறு National System Operations Private Limited கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்கவுள்ளதாக திறைசேரி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் இந்த மானியம் காரணமாக மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்தாலும், 95 சதவீதமான நுகர்வோருக்கு கட்டண உயர்வு அவசியமில்லை என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் வருடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளைக் கருத்திற் கொண்டு, மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான புதிய யோசனையொன்றை தேசிய , அமைப்புகள் செயற்பாட்டு தனியார் நிறுவனம் நேற்று முன்தினம் சமர்ப்பித்திருந்தது.
கடந்த 6ஆம் திகதி இதே நிறுவனம் இரண்டாம் காலாண்டிற்காக 15 சதவீத கட்டண உயர்வை கோரியிருந்தது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, இரண்டாம் காலாண்டில் நிலவிய 31 பில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை தற்போது 38 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், திறைசேரியின் நிதித் தலையீடு காரணமாகப் பெரும்பாலான மின் நுகர்வோர் இந்த பாரிய கட்டண அதிகரிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





