உலகம்

ஈரான் போரால் உலகிற்கு 50 பில்லியன் டொலர் நஷ்டம்: வெளியான அதிர்ச்சியூட்டும் தரவுகள்

ஈரான் போர் தொடங்கி 50 நாட்களுக்குப் பின்னர், உலகிற்கு ஏற்பட்ட எண்ணெய் இழப்பின் மதிப்பு 50 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

 

இந்த நெருக்கடியின் தாக்கம் எதிர்வரும் மாதங்களில் மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு உணரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாடு “விரைவில்” எட்டப்படும் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார், ஆனால் அதற்கான காலக்கெடுவை அவர் குறிப்பிடவில்லை.

 

பெப்ரவரி மாத இறுதியில் நெருக்கடி தொடங்கியதிலிருந்து, 500 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் உலகச் சந்தையில் இழக்கப்பட்டுள்ளது.

 

இது நவீன வரலாற்றில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இடையூறாகக் கருதப்படுகிறது.

 

மார்ச் மாதத்தில், வளைகுடா அரபு நாடுகள் நாளொன்றுக்கு 8 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை இழந்தன.

 

இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மோபில் மற்றும் செவ்ரான் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு இணையானதாகும்.

 

சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் ஜெட் எரிபொருள் ஏற்றுமதி, பெப்ரவரி மாதத்தில் 19.6 மில்லியன் பீப்பாய்களாக இருந்த நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 4.1 மில்லியன் பீப்பாள்களாக கடுமையாகக் குறைந்துள்ளது.

 

ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் சராசரி விலை 100 டொலர் எனக் கணக்கிட்டால், இழக்கப்பட்ட எண்ணெயின் மதிப்பு சுமார் 50 பில்லியன் டொலர் ஆகும்.

 

ஹோர்முஸ் நீரிணை திறந்துள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறிய போதிலும், எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்புவது மிகவும் தாமதமாகவே உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button