
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய முடியாமல் போயுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (03) கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய பதற்றமான சூழலால் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தில் வாரத்திற்கு 10 முதல் 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்பு ஏற்படுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு ஊடாக (துபாய், அபுதாபி, கட்டார்) வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இந்த முடக்கம் காரணமாக அதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் பிரதான சுற்றுலாச் சந்தையான இந்தியா மற்றும் சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஐரோப்பிய பயணிகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாற்று வான்வழிகள் ஊடாக நேரடி விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. எனினும் எதிஹாட், கட்டார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் இன்னும் தமது சேவைகளை மீள ஆரம்பிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்பினால், தூதரகங்கள் ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது





