
அமெரிக்க உயர் நீதிமன்றம் ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்துள்ள போதிலும், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டொலர் வரிப்பணத்தை மீண்டும் பெறுவது “பல ஆண்டுகள்” வரை இழுத்தடிக்கப்படலாம் என அமெரிக்கப் திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வரிப்பணத்தைத் திருப்பி வழங்குவது குறித்து எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை. எனவே, இது சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் நீண்ட காலத்திற்கு வழக்காகத் தொடரக்கூடும்.
“இந்த விவகாரம் வாரங்கள், மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் வரை இழுத்தடிக்கப்படலாம்.
அமெரிக்க மக்கள் அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை” என அவர் டல்லாஸில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டார்
அவசரகால அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டாலும், தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி மற்றும் நியாயமற்ற வர்த்தக முறைகளுக்கு எதிரான சட்டங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து வரிகளை விதிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
புதிய 10 வீத உலகளாவிய வரிகளை அமுல்படுத்துவதன் மூலம், 2026 ஆம் ஆண்டில் அமெரிக்க கருவூலத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் எந்த மாற்றமும் இருக்காது என பெசன்ட் கணித்துள்ளார்.





