
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, சபாநாயகர் ஒருவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ளன.
இறுதியாக 1987 ஆம் ஆண்டில், சபாநாயகராக இருந்த பல்ராம் ஜாக்கருக்கு எதிராக இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், சமாஜ்வாடி உள்ளிட்ட ‘இந்தியா’ (INDIA) கூட்டணியைச் சேர்ந்த சுமார் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்த பிரேரணையை வழங்கியுள்ளனர்.
இதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றும்பாது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை முழுமையாகப் பேச அனுமதிக்காமல் ஒலிவாங்கி துண்டிக்கப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்ட சில புத்தகக் குறிப்புகளை வாசிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
அதேநேரம், பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்க காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சதி செய்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய கருத்து, சபையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது பெண் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
அதேநேரம், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது தாராளமாக அனுமதி வழங்கும் சபாநாயகர், எதிர்க்கட்சிகள் முக்கியப் பிரச்சினைகளை எழுப்பும்போது சபையை ஒத்திவைப்பதாகவோ அல்லது உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாகவோ அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 96 ஆவது பிரிவின்படி, சபாநாயகரைப் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் விவாதத்திற்கு வரும்போது, அவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்த முடியாது. ஆனால், அவர் அவையில் கலந்துகொண்டு தனது தரப்பு விளக்கத்தை அளிக்கலாம்.
தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது, அவர் ஒரு சாதாரண உறுப்பினராகத் தனது வாக்கைப் பதிவு செய்யலாம். ஆனால், வாக்குகள் சமநிலையில் இருக்கும்போது சபாநாயகருக்கு வழங்கப்படும் வாக்கு அவருக்கு வழங்கப்படாது.
இந்தத் தீர்மானம் நிறைவேற அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு தேவை.
தற்போதைய அரசியல் சூழலில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் உள்ளனர். தீர்மானம் நிறைவேற 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
எதிர்க்கட்சிகளிடம் சுமார் 234 உறுப்பினர்களே இருப்பதால், இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவது கடினம்.
இருப்பினும், சபாநாயகரின் செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தவும், தார்மீக ரீதியாக அவருக்கு அழுத்தம் கொடுக்கவுமே எதிர்க்கட்சிகள் இந்த உத்தியைக் கையாண்டுள்ளன.





