இலங்கை

திங்கட்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.

 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை உள்ளடக்கிய வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

 

மத்திய செயற்குழு, தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வை முன்வைக்க சுகாதார அமைச்சருக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்கியிருந்தது.

 

இருப்பினும், சுகாதார அமைச்சு உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், போராட்டத்தை மேலும் வலுப்படுத்த இன்று தீர்மானிக்கப்பட்டது.

 

இதேவேளை வைத்தியசாலையில் கையிருப்பில் இல்லாத மருந்துகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்கு பரிந்துரைத்து மருந்துச் சீட்டுகளை வழங்குவது நிறுத்தப்படும் எனவும் வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு பரிந்துரைப்பது நிறுத்தப்படும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது .

 

அரசியல் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் கிளினிக்குகளில் வைத்தியர்கள் தன்னார்வமாக கலந்துகொள்வதிலிருந்து விலகுவர், போதிய வைத்தியர்கள் இல்லாத நிலையில், வைத்தியசாலைகளில் புதிதாக திறக்கப்படும் வார்ட்கள் அல்லது பிரிவுகளுக்கு வைத்தியர்களை இணைப்பது நிறுத்தப்படும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது .

 

நோயாளர்களின் பாதுகாப்பு, தனிப்பட்ட இரகசியத்தன்மை மற்றும் போதுமான ஊழியர் வசதிகள் இல்லாத சூழலில் நோயாளர்களைப் பரிசோதிப்பதிலிருந்து வைத்தியர்கள் விலகுவர் எனவும் விசேட வைத்திய நிபுணர்கள் தாம் நியமிக்கப்பட்ட வைத்தியசாலையில் மாத்திரமே சேவையாற்றுவர் எனவும் விசேட நிபுணர்கள் இல்லாத பிற வைத்தியசாலைகளுக்குச் சென்று மேலதிக கடமைகளை ஆற்றுவதிலிருந்து அவர்கள் விலகிக்கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

இவ்வாறான கடும் நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button