
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் (பெப்ரவரி) இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் அமையவுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்த அதிகாரபூர்வ அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
இதனை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதுவர் ரூவன் அசார் (Reuven Azar) உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆசியாவில் பெரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், மோடியின் இந்தப் பயணம் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
தொழில்நுட்பம், பாதுகாப்பு, வர்த்தகம், புத்தாக்கம், விவசாயம், நீர் மேலாண்மை போன்ற உயர்தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கத்தை இந்தப் பயணம் பறைசாற்றும்.
சமீபகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்டப் பிரதிநிதிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் சமீபத்தில் இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டனர்.
இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நிலவும் ஒருங்கிணைப்பு குறித்து டெல்லி மற்றும் டெல் அவிவ் இடையே தொடர்ச்சியான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.





