
‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை உளசமூக ரீதியாக வலுப்படுத்தவும், அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலைமையிலான அரசாங்க முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் அண்மையில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
பேரழிவுகளுக்குப் பின்னர் மகளிர் மற்றும் சிறுவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் உளசமூக ஆற்றுப்படுத்தற் (Post-disaster psychosocial counselling) சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அரசாங்க நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்தி, அவற்றை விரிவுபடுத்துவதன் ஊடாகவே அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு பயனுள்ளதாக அமையும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
தனித்தனியான திட்டங்களை செயல்படுத்துவதை விட, தற்போதுள்ள அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதே சிறந்த அணுகுமுறை எனக் குறிப்பிடப்பட்டது.
இதற்கு இணக்கம் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA), ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை உளசமூக ரீதியாக வலுப்படுத்தவும், அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலைமையிலான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
அதன்படி, பேரழிவிற்குப் பிந்தைய உளசமூக ஆற்றுப்படுத்தற் சேவைகளில், குறிப்பாக பெண்கள் மற்றும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு வழங்கப்படும் சேவைகளுக்காக, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) தொழில்நுட்பப் பங்காளராகச் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்சன, அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, UNFPA இலங்கையின் உதவிப் பிரதிநிதி கலாநிதி தயநாத் ரணதுங்க, UNFPA பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
‘Rebuilding Sri Lanka’ முயற்சியின் கீழ் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் இக்காலகட்டத்தில், இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறைகள் மூலம் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை குணப்படுத்தவும், அவர்களின் மீண்டெழும் திறனை (Resilience) வலுப்படுத்தவும், நிலையான தேசிய மறுமலர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் முடியும் என வலியுறுத்தப்பட்டது.





