இலங்கை

16 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 16 ஆம் திகதி முதல் நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள முன்னறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button