சுவிஸ்

சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற தமிழ்க் கல்விச்சேவை முத்தமிழ்விழா.

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 13 செப்ரெம்பர் 2025, சனிக்கிழமை பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்ப் நகரில் தமிழர் பாரம்பரிய இசையாகிய இன்னியத்துடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மத குருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் என அரங்கம் நிறைந்த மக்களுடன் பெருவிழாவாக நடைபெற்றது. தமிழ்க் கல்விச்சேவையின் முப்பதாவது ஆண்டு சேவையைச் சிறப்பிக்குமுகமாக, அதன் வரலாற்றைக் காட்சிப்படுத்தும் காணொளிக்காட்சி இடம்பெற்றது.

அத்தோடு, தமிழ்ப்பள்ளிகளின் சுருக்க வரலாறுகள் அடங்கிய 30 ஆண்டு நிறைவுச் சிறப்பு மலரும் மதிப்பளிப்பு நிழற்படங்கள் அடங்கிய முத்தமிழ்விழா மலரும் வெளியிடப்பெற்றன. 2024ஆம் ஆண்டுமுதல் செயற்பட்டவரும் மொழி பண்பாட்டு நிறுவனத்தின் (ஐடுஊ) தமிழ் கற்பித்தலில் பட்டயக்கல்வியை நிறைவுசெய்த முதல்தொகுதி மாணவர்களுக்கான பட்டயமளிப்பு நிகழ்வும் இவ்விழாவில் இடம்பெற்றது. ஐரோப்பிய நாடுகள் தழுவிய வகையிலே மேற்கொள்ளப்பெற்ற இப்பட்டயக்கல்வியில் சுவிற்சர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 32 ஆசிரிய மாணவர்கள் பட்டயத்தைப் பெற்றிருந்தார்கள். அத்தோடு, ஐடுஊ இலே இணைந்து தமிழை இரண்டாவது மொழியாகக் கற்கும் வெளிநாட்டவருக்கான சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன. 2025ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கல்வியில் ஆண்டு 10, ஆண்டு 12 சித்திபெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் தமிழ்க்கல்விப்பணியில் 30, 25, 20, 10 ஆண்டுகள் நிறைவுசெய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றன. 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்களுக்கு ‘தமிழ்ச்சுடர்’ என்ற உயரிய விருதும் 25 ஆண்டுகள் பணிநிறைவினைச் செய்த ஆசிரியர்களுக்கு ‘தமிழ்மணி’ என்ற உயரிய விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பெற்றது. ஐரோப்பிய பொது மொழிக்கட்டமைப்பக்கு அமைய தமிழ்மொழிக் கல்வியில் ஆண்டு 10 சித்தியடைந்த மாணவர்களுக்கு B1 தரச்சான்றிதழும் ஆண்டு 12 சித்தியடைந்த மாணவர்களுக்கு C1 தரச்சான்றிதழும் ILC ஊடாக வழங்கப்பெற்றது. சுவிஸ் நாட்டவர்களும் தமிழ் மொழியினை கற்று மதிப்பளிப்பினை பெற்றமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது. அத்துடன் தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறைக்கான www.tess-sports.ch எனும் பதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பெற்றது.

முத்தமிழ் விழாவின் அனைத்துப் பணிகளிலும் இளையோர் உள்வாங்கப்பெற்று, மிகச் சிறப்பாக கலைப்பணியாற்றியிருந்தனர். பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரதும் ஒருமித்த உழைப்பின் அறுவடையாகச் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா 2025 எமது மொழி, பண்பாடு என்பவை அடுத்த தலைமுறையினரிடம் தக்கவாறு கையளிக்கப்படுகின்ற செய்தியையும் தமிழ்மொழியைத் தமிழர் அல்லாதோருக்கும் கற்பித்துத் தகைநிறை சான்றிதழினை வழங்கக்கூடிய மொழி பண்பாட்டு நிறுவனம் ஒன்றையும் தமிழ்க் கல்விச்சேவை தன் முப்பது ஆண்டு வரலாற்றில் உருவாக்கியிருக்கிறது என்ற செய்தியையும் வெளிப்படுத்திநின்றது. இவ்விழா சிறப்புறக் கடுமையாக உழைத்த அனைவருக்கும் தமிழ்க் கல்விச்சேவைநன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தகவல்: தமிழ் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button