
கச்சதீவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்ட திடீர் பயணம் இந்திய அரசியலில் பேசுபொருளாகியுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான பிரச்சினைகளுக்கு இந்தப் பயணம் வழிவகுக்குமா என்ற கோணத்தில் விவாதங்களும் எழுந்துள்ளன.
1974ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தத்தின் ஊடாக கச்சதீவை அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு வழங்கியிருந்தார். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இருநாட்டு மீனவர்களும் இந்தப் பகுதியில் இளைப்பாறலாம் என்ற இணக்கப்பாடு இருந்தது. யுத்தம் காரணமாக ஆரம்பத்தில் மீனவர் பிரச்சினை பேசுபொருளாகவில்லை.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், இலங்கையின் கடற்பரப்பை முழுமையாக இலங்கை கடற்படை தமது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தது முதல் மீனவர்கள் பிரச்சினையும் தலைத்தூக்க ஆரம்பித்தது. தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாக கைதுகள் தொடர்ந்து இடம்பெறுவதுடன், அவர்களது படகுகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் கடற்படையின் தாக்குதல்களுக்கும் தமிழக மீனவர்கள் இறையாகி உள்ளனர்.
கச்சதீவு இந்தியா வசமிருந்தால் பிரச்சினை எழாது
இருநாட்டு அரசுகள் மற்றும் மீனவ சங்கங்களுக்கு இடையில் பல சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ள போதிலும் இன்னமும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை.





