
செம்மணி மனிதப் புதைகுழிகள்:
யாழ் .செம்மணி மனிதப் புதைகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவையினரால் சர்வதேச நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள இந்து மயானத்திற்கு அருகே, 2025 பெப்ரவரியில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், இலங்கையில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள காணாமலாக்கப்படுதல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்த கசப்பான உண்மைகளை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, யாழ் நீதிவான் நீதிமன்றம் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி அளித்தது.
அகழ்வாராய்ச்சியின் அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்புகள்
“தடயவியல் அகழ்வாராய்ச்சி தளம் இல. 01” மற்றும் “தடயவியல் அகழ்வாராய்ச்சி தளம் இல. 02” என அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், இதுவரை 41 நாட்கள் அகழ்வுப் பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 6, 2025 அன்று இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிகள் முடிவுக்கு வந்த நிலையில், 133 எலும்புக்கூடுத் தொகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. மேலும், 147 எலும்புக்கூடுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த அகழ்வாராய்ச்சியின் போது ஒரு சிசுவின் எலும்புக்கூடு முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டது, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளைக் கூட படுகொலை செய்து புதைக்கும் அளவுக்கு குரூரமான மனநிலை இருந்ததை இது உறுதிப்படுத்தியுள்ளது. நீல நிற பள்ளிப் புத்தகப்பை, பாற்சூப்பி போன்ற சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. சிசுவின் எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் இவை கண்டெடுக்கப்பட்டது, மனித குலத்திற்கு எதிரான மிலேச்சத்தனமான செயல்கள் நடந்திருப்பதையும், இந்தப் புதைகுழியை முழுமையாக அகழ வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்துகிறது.
வரலாற்றுப் பின்னணி: செம்மணியும் அதற்கு முந்தைய சம்பவங்களும்
செம்மணி சம்பவம் என்பது இலங்கையில் 1990களின் நடுப்பகுதி வரை தொடர்ந்த வலுக்கட்டாயமான காணாமலாக்கப்படுதல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகளின் நீண்ட, தீர்க்கப்படாத வரலாற்றின் ஒரு பிரதிபலிப்பு.
குறிப்பாக, 1998 இல், யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசாமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவருடன் அவரது குடும்பத்தினரான தாய் ராசம்மா, தம்பி பிரணவன் (வயது 16), மற்றும் குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உள்ளிட்ட பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ, குமாரசாமி குடும்பம் புதைக்கப்பட்ட இடத்தில் 300 – 400 தமிழ் பொதுமக்கள் புதைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார். இந்தச் சாட்சியத்தின் அடிப்படையில், 1998 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 10 வரை அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது 15 மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் ஒரு பெண் குழந்தையின் உடல் உட்பட 4 உடல்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டன (ரகுராமன், விஜயசங்கர், ஜெயச்சந்திரன் மற்றும் யோகநாதன்).
மீதமுள்ள 11 உடல்களை அடையாளம் காணும் பணி நீண்டகாலமாக தாமதமாகி வருகிறது. தடயவியல் பரிசோதனைகள் மூலம் பலர் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பல உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், கண்களில் துணிகள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டன, இது அவர்களைக் கொல்வதற்கு முன்னர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான வலுவான ஆதாரமாக அமைந்தது.
நீதிக்கான அழைப்பு மற்றும் பரிந்துரைகள்
செம்மணி மனிதப் புதைகுழிகள் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களின் தீவிரத்தையும், வலிந்து காணாமலாக்கப்படுதலுக்கான பொறுப்புக்கூறலின் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு நாம் பரிந்துரைக்கிறோம்:
- வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய புதைகுழிகளை அகழ்தல்: செம்மணி போன்ற பல மனிதப் புதைகுழிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அனைத்து இடங்களிலும் சர்வதேச மேற்பார்வையுடன் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- சோமரத்ன ராஜபக்ஷவிடம் சர்வதேச தளத்தில் வாக்குமூலம் பெறுதல்: குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள சோமரத்ன ராஜபக்ஷ, சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார் என அறிவித்துள்ளார். செம்மணிக்கும் அப்பாலுள்ள புதைகுழிகளையும், அதற்குக் காரணமானவர்களையும் அறிவிப்பதற்கும், அடையாளம் காண்பதற்கும் தயார் என அவர் கூறியுள்ள நிலையில், அவரிடத்தில் முழுமையான சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும்.
- சர்வதேச மேற்பார்வையுடன் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்தல்: செம்மணி மனிதப் புதைகுழிகள் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பான எதிர்கால அகழ்வுப் பணிகள் சர்வதேச தடயவியல் மற்றும் மனித உரிமை நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும். இது விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.
- சான்றாதாரங்களை ஆராய்வதற்கான ஆய்வுகூடத்தை நிறுவுதல்: கண்டறியப்பட்ட உடல்கள் மற்றும் தடயவியல் சான்றுகளை முறையாக ஆராய, சர்வதேச தரத்திலான, சுதந்திரமான ஆய்வுகூடம் இலங்கையில் நிறுவப்பட வேண்டும்.
- முழுமையான விசாரணைகளை ஆரம்பித்தல்:கிருஷாந்தி குமாரசாமி மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்குகள், சித்துப்பாத்தி வழக்குகள் ஆகியவற்றை இணைத்து, ஒரு குற்றப் பின்னணியின் கீழ் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படுவதை இது உறுதி செய்யும்.
- சர்வதேசத்தின் தொடர்ச்சியான தலையீடும் அழுத்தமும்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
- நியாயமான நீதிக்குத் தொடர் ஆதரவு: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதற்கான சட்ட மற்றும் உளவியல் ஆதரவை சர்வதேச சமூகமும், தூதரகங்களும் வழங்க வேண்டும்.
- இதயசுத்தியான பொறுப்புக்கூறல்: கடந்தகால மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் இதயசுத்தியுடன் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், சான்றாதாரங்களும் நீதிக்கான மிகப்பெரும் போராட்டத்தின் வலியை வெளிப்படுத்துகின்றன. இது இலங்கையின் வரலாற்றில் மறையாத கரும்புள்ளியாக என்றென்றும் நிலைத்திருக்கும். காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் நிலைமைக்கு நீதி கிடைப்பது மட்டுமே இந்த வலிகளுக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதை நாம் மீண்டும் சுட்டிக்காட்டி உடனடியான தலையீடுகளைச் செய்யுமாறு கோரிநிற்கின்றோம்.









