அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு, வாழ்வின் கடைசிக் காலத்தில் தேவையான அன்பான பராமரிப்பு (Palliative Care) சுவிஸில் கிட்டத்தட்ட கிடைப்பதில்லை. இதை மாற்ற கிழக்கு சுவிஸ் உயர்கல்வி நிறுவனமான OST (Ostschweizer Fachhochschule) புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
சுவிஸில் சுமார் 20,000 பேர் இப்படி வாழ்கிறார்கள். சிந்திப்பது, கற்றுக்கொள்வது, நினைவில் வைப்பது, பேசுவது இவர்களுக்குக் கடினம். ஆனால் இவர்களிடம் மரணம் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்களால் தாங்க முடியாது என்று பலர் நினைக்கிறார்கள். சிலருக்கு எப்படிப் பேசுவது என்றே தெரியாது.
இந்தத் திட்டத்தில் 53 வயது உர்பான் ஹன்னி (Urban Hanny) பங்கேற்றார். பிறவியிலிருந்தே முதுகெலும்புக் குறைபாடு உள்ள அவர், மின்சார சக்கர நாற்காலியில் வாழ்கிறார். செங்காலன் மாநிலத்தின் (St. Gallen) வித்தன்பாக்கில் (Wittenbach) உள்ள க்ரோன்பூல் அறக்கட்டளை (Stiftung Kronbühl) இல்லத்தில் இருக்கிறார். அவர் குழுவில் பலர் இறந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை மூடி மறைக்கக் கூடாது என்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் எண்ணங்களைச் சொல்ல விளையாட்டுப் பொம்மைகளைப் பயன்படுத்தினார்கள்.
ஆய்வுக் குழு 20-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. சுகாதார மற்றும் சமூகப் பணியாளர்களின் படிப்பில் இந்தப் பயிற்சியைச் சேர்க்க வேண்டும். முதியோர் இல்லங்கள், வீட்டுக்கே வந்து பராமரிக்கும் ஸ்பிடெக்ஸ் (Spitex) சேவை, மதகுருமார், தன்னார்வலர்கள் எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.
இந்தத் திட்டம் இப்போது சில இல்லங்களிலும் மருத்துவமனைகளிலும் நடைமுறைக்கு வருகிறது. 2026 இறுதியில் அதன் பலன் சோதிக்கப்படும். கடைசி நிமிடம் வரை தங்கள் விருப்பப்படி வாழ இவர்களுக்கு உதவுவதே நோக்கம்.
மூலம்: SRF
புகைப்படம்: National Cancer Institute / Unsplash





