வின்டர்தூர் (Winterthur) நகரில் வெள்ளிக்கிழமை 90 வயது முதியவர் ஓட்டிய கார் ட்ரெயின் தண்டவாளத்தில் போய் நின்றது. ட்ரெயின் மோதுவதற்குச் சற்று முன்பு அவர் காரை விட்டு இறங்கி உயிர் தப்பினார்.
சூரிச் மாநிலத்தில் (Zürich) மாலை 4.30 மணியளவில் இது நடந்தது. முதியவர் காரின் கட்டுப்பாட்டை இழந்ததாக நகரப் போலீஸ் ஆரம்பக் கட்டத்தில் கூறியுள்ளது. கார் தண்டவாளத்தில் இறங்கி நின்றுவிட்டது.
அந்நேரம் சூரிச் பகுதியின் புறநகர் ட்ரெயின் (S-Bahn) வந்தது. ட்ரெயின் ஓட்டுநர் பிரேக் போட்டார். ஆனாலும் ட்ரெயினை நிறுத்த முடியவில்லை. நின்றிருந்த காரின் மேல் மோதியது.
முதியவருக்குக் காயம் எதுவும் இல்லை. ஆனாலும் பரிசோதனைக்காக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். ட்ரெயினில் இருந்த 126 பயணிகளுக்கும் ஒன்றும் ஆகவில்லை.
கார் முழுவதும் நொறுங்கிப் போனது. ட்ரெயினுக்கும் பெரிய சேதம் ஏற்பட்டது. சீன் (Seen) – சென்ஹோஃப் (Sennhof) இடையே ட்ரெயின் போக்குவரத்து பல மணி நேரம் தடைபடும் என்று போலீஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மூலம்: Le Matin
புகைப்படம்: Joshua Adams / Unsplash





