சுவிஸில் இந்த ஆண்டு நவம்பர் 27 அன்று பிளாக் ஃப்ரைடே (Black Friday) வருகிறது. கடைகளிலும் ஆன்லைனிலும் தள்ளுபடி மழைதான். ஆனால் அவசரப்பட்டு வாங்கினால் பிறகு ஏமாற்றம்தான் மிஞ்சும் என்கிறார் நுகர்வோர் உளவியலாளர் கிறிஸ்டியன் ஃபிக்டர் (Christian Fichter).
சுவிஸில் இந்த ஒரு நாளில் மட்டும் 700 மில்லியன் பிராங்குக்கு மேல் விற்பனை நடக்கும் என்று குட்லீப் டுட்வைலர் ஆய்வு நிறுவனம் (Gottlieb Duttweiler Institute) மதிப்பிடுகிறது. கடந்த ஆண்டு ஒருவர் சராசரியாக 3 பொருட்கள் வாங்கினார். ஒவ்வொருவரும் சுமார் 200 பிராங்க் செலவழித்தார்கள்.
தள்ளுபடி கொஞ்ச நேரம்தான் என்றால் நமக்கு அவசரம் வருகிறது. “தவறவிட்டால் போய்விடும்” என்ற பயமும் வருகிறது. அப்போது மூளை வேகமாக, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிறது. யோசிக்கும் திறன் பின்னால் போய்விடுகிறது. வீட்டுக்கு வந்து பார்சலைப் பிரித்தபின் “இது இவ்வளவு தேவையா?” என்று தோன்றுகிறது.
தப்பிக்க சில வழிகளை அவர் சொல்கிறார். தள்ளுபடிக்குப் பின்னால் கடைக்காரர்களின் தந்திரம் இருப்பதை நினைவில் வையுங்கள். கடைக்குள் போகாதீர்கள். விளம்பர நியூஸ்லெட்டர்களை வேண்டாம் என்று சொல்லுங்கள். தேவையானவற்றை முதலிலேயே ஒரு பட்டியலாக எழுதுங்கள். வாங்கும் முன் முன்பு செய்த தவறுகளை நினைத்துப் பாருங்கள். தெரிந்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் யோசியுங்கள்.
இப்போது பல கடைகளில் தள்ளுபடி நவம்பர் மாதம் முழுவதும் இருக்கிறது. அதனால் அவசர அழுத்தம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. மக்களும் பழகிவிட்டார்கள். வாங்கும் பொருட்களில் பெரும்பாலானவை ஏற்கனவே அவர்களின் தேவைப் பட்டியலில் இருந்தவைதான். இருந்தும் இந்தத் தள்ளுபடி நிற்கவில்லை. போட்டி கடைகளுக்குப் பயந்து யாரும் முதலில் நிறுத்த விரும்புவதில்லை. மது, சாக்லேட் மாதிரி தள்ளுபடியையும் எதிர்ப்பது கஷ்டம் என்கிறார் ஃபிக்டர்.
மூலம்: RSI
புகைப்படம்: CardMapr.nl / Unsplash





