சுவிஸ்ஸில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை மூன்றாவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) கணிசமாக உயர்ந்துள்ளது. சுவிஸ் புள்ளிவிவர அலுவலகம் (UST) வியாழக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது.
உலகத் தொழிலாளர் அமைப்பின் (ILO) கணக்கின்படி, வேலையில்லாதோர் விகிதம் இப்போது 5.6 சதவீதம். முந்தைய மூன்று மாதங்களில் இது 5.1 சதவீதமாக இருந்தது. மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பை விட 36 ஆயிரம் பேர் அதிகம்.
இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 8 பேரில் ஒருவருக்கு வேலை இல்லை. வெளிநாட்டவர்களிடையே வேலையில்லாதோர் விகிதம், சுவிஸ் குடிமக்களை விட கிட்டத்தட்ட இருமடங்கு. பெண்களிடம் இது ஆண்களை விடச் சற்று அதிகம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி 6.2 சதவீதம். சுவிஸ் இன்னும் அதற்குக் கீழேதான் உள்ளது. ஆனால் சுவிஸ்ஸில் உயர்வு மிக வேகமாக இருக்கிறது. ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து உட்பட 13 ஐரோப்பிய நாடுகளில் இப்போது சுவிஸ்ஸை விடக் குறைவான விகிதமே உள்ளது.
அரசின் பொருளாதாரச் செயலகம் மாதந்தோறும் தனியாகக் கணக்கெடுக்கிறது. அது, வேலை தேடி அரசு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களை மட்டுமே எண்ணுகிறது. அந்த விகிதம் ஜூலை முதல் செப்டம்பர் வரை 3.0 சதவீதத்திலேயே மாறாமல் இருந்தது. அதே நேரம் வேலையில் இருப்பவர்கள் சுமார் 54 லட்சம் பேர். இது கடந்த ஆண்டை விட அதிகம்.
மூலம்: RSI
புகைப்படம்: Eric Prouzet / Unsplash





