சுவிஸ்

லொசானில் சைக்கிள் சர்ச்சை: கார் ஓட்டுநர்களும் சைக்கிளோட்டிகளும் நேருக்கு நேர்

வோ மாநிலத் தலைநகரான லொசானில் (Lausanne) சைக்கிள்களைப் பற்றிய வாக்குவாதம் சூடுபிடித்துள்ளது. சைக்கிளோட்டிகள், நடந்து செல்வோர், கார் ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் எல்லோரும் ஒருவர் மேல் ஒருவர் குறை சொல்கிறார்கள்.

இந்தக் கருத்துகளை “20 Minutes” செய்தித்தளம் தன் வாசகர்களிடமிருந்து திரட்டியுள்ளது. சைக்கிளோட்டிகள் சிவப்பு விளக்கில் நிற்பதில்லை என்றும், நடைபாதையில் ஓட்டுகிறார்கள் என்றும் பலர் சொல்கிறார்கள். நடப்பவர்களுக்கு மிக அருகில் வேகமாகப் போவதாகவும் புகார் உண்டு. இன்னும் அதிகமாகப் போலீஸ் சோதனை வேண்டும் என்கிறார்கள். குழந்தைகளையும் பொருட்களையும் ஏற்றிச் செல்லும் பெரிய கார்கோ சைக்கிள்களுக்கு எதிராகவே அதிக கோபம். சிலர் அவற்றைத் தடை செய்யச் சொல்கிறார்கள். கார்களுக்கு இருக்கும் வரி இவற்றுக்கு ஏன் இல்லை என்றும் கேட்கிறார்கள்.

கார் ஓட்டுபவர்களின் கோபம் நகர நிர்வாகத்தின் மேலும் திரும்பியுள்ளது. கார் நிறுத்த இடங்களைக் குறைத்து, பார்க்கிங் கட்டணத்தையும் கூட்டி, காருக்கு எதிராகப் போர் நடத்துகிறார்கள் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. அதனால் நகர மையத்தில் பொருள் வாங்குவதை விட்டுவிட்டு, ஊருக்கு வெளியே உள்ள பெரிய கடைத் தொகுதிகளுக்குப் போவதாகச் சிலர் சொல்கிறார்கள்.

சைக்கிள் ஆதரவாளர்கள் இதை ஏற்கவில்லை. நூறு வருடம் கார்கள் ஆண்டுவிட்டன, இனி சாலையை நடப்பவர்களுக்கும் சைக்கிளுக்கும் பொதுப் போக்குவரத்துக்கும் பகிர வேண்டும் என்கிறார்கள். நடைபாதைத் தெருக்களால் கடைகளுக்கு நட்டம் வராது என்றும் சொல்கிறார்கள். நடுவில் இருக்கும் சிலர், எல்லோரும் ஒருவரை ஒருவர் மதித்தால் போதும் என்கிறார்கள்.

நகர மையத்தில் வசிப்பவர்களுக்கு பஸ், ட்ரெயின் வசதி நன்றாக இருக்கிறது. ஆனால் புறநகரில் இருப்பவர்களுக்குக் காரை விட்டுவிடுவது கடினம். பொதுப் போக்குவரத்து பாஸ் கட்டணமும் விலை அதிகம் என்று பலர் சொல்கிறார்கள்.


மூலம்: Le Matin
புகைப்படம்: Noralí Nayla / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button