சுவிஸ்

புதிய ரிசர்வ் மின்நிலையங்கள் தேவையா? சுவிஸ் அரசுக்குள் எழும் சந்தேகம்

மின்சாரத் தட்டுப்பாடு வந்தால் பயன்படுத்த, சுவிஸ் அரசு புதிய “ரிசர்வ் மின்நிலையங்கள்” கட்ட திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அரசுச் செலவுகளைச் சோதிக்கும் சுவிஸ் நிதிக் கட்டுப்பாட்டு அலுவலகம் (EFK) இப்போது கேள்வி கேட்டுள்ளது.

இதற்கு முன்பே தேசிய சபையின் (Nationalrat) எரிசக்திக் குழுவும் சந்தேகம் தெரிவித்திருந்தது. அர்காவ் மாநிலத்தின் (Aargau) பிர் (Birr) நகரில் அவசரச் சட்டத்தில் கட்டிய ரிசர்வ் மின்நிலையம் சட்டவிரோதம் என்று நீதிமன்றம் சொன்னது. அதனால் அதை இந்த ஆண்டு இடித்து அகற்றினார்கள். அதனால்தான் இப்போது புதிய நிலையங்கள் திட்டமிடப்படுகின்றன. அவை ஐகன், ஷ்டைன் (Eiken, Stein) மற்றும் முட்டென்ஸ் (Muttenz) பகுதிகளில் வரவுள்ளன. மொத்தச் செலவு 2.3 பில்லியன் பிராங்க்.

சுவிஸ் 2035-க்குள் சூரிய, காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இலக்குப்படி உருவாக்கினால், இந்த நிலையங்கள் தேவையில்லை என்று நிதிக் கட்டுப்பாட்டு அலுவலகம் சொல்கிறது. ஆனால் அந்த இலக்கு தாமதமானால் என்ன செய்வது என்பது அரசியல் முடிவு என்றும் கூறுகிறது. நிலையங்கள் வேண்டும் என்றால் செலவைக் குறைக்கலாம் என்கிறது. மருத்துவமனைகளில் உள்ள அவசரக்கால ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தினால் 220 மில்லியன் பிராங்க் மிச்சமாகும். சுவிஸில் இப்படிப்பட்ட ஜெனரேட்டர்கள் 6000-க்கும் மேல் உள்ளன.

எரிசக்தி அமைச்சர் ஆல்பர்ட் ரோஸ்டி (Albert Rösti) இதை ஏற்கவில்லை. அணுமின் நிலையம் ஓடாமலும், வெளிநாட்டிலிருந்து மின்சாரம் வராமலும் இருந்தால் இந்த நிலையங்கள் தேவை என்கிறார். 2035-க்கு முன் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் போதுமான அளவு வராது என்றும் சொல்கிறார். காற்றுத் தூய்மைச் சட்டத்தால் ஜெனரேட்டர்களை நீண்ட நேரம் ஓட்ட முடியாது என்பதும் அவர் வாதம். புதிய நிலையங்கள் வருமா என்பது அடுத்த ஆண்டு முடிவாகும்.


மூலம்: SRF
புகைப்படம்: Matthias Speicher / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button