
கனடிய தமிழீழத் தமிழ் நடிகையான மைத்ரேயி ராமகிருஷ்ணன், தனது தாய்நாடான தமிழீழம் பற்றிய அடையாளம் மற்றும் இனப்படுகொலை குறித்துப் பகிரங்கமாகப் பேசிவருவதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக இணையவழியில் திட்டமிட்ட விமர்சனங்களும் வெறுப்புப் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திட்டமிட்ட மதிப்பீட்டுக் குறைப்பு (Review Bombing):
மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்துள்ள ‘Best of the Best’ திரைப்படத்திற்கு எதிராக சமூக வலைதளங்கள் வாயிலாக நெகட்டிவ் விமர்சனங்களைப் பரப்பவும், IMDb போன்ற தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி மிகக் குறைந்த புள்ளிகளை (1 Star) வழங்கவும் சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. மேலும் இணையத்தில் தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக வெறுப்புரைகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த இணையவழித் தாக்குதலுக்கு எதிராக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலக நாடுகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர் அமைப்புகள் (Tamil Youth Organizations) மற்றும் பல்வேறு பல்கலைக்கழகத் தமிழ் சங்கங்களின் தமிழ் இளையோர் ஒன்றிணைந்து ஆதரவுக் குரல் கொடுத்துள்ளன.
முன்னெடுக்கப்படும் கோரிக்கைகள்:
இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள தமிழ் இளையோர் அமைப்புகள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளன:
• சுயவிவரப் படம் மாற்றம்: சமூக வலைதளங்களில் தமிழீழ ஆதரவுப் படங்களை வைப்பது.
• திரைப்பட விமர்சனம்: திரைப்படத்தைப் பார்த்து நேர்மையான மதிப்பீடுகளையும் கருத்துகளையும் பகிர்வது.
• விழிப்புணர்வு: #FREETAMILEELAM போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி, செல்வாக்குமிக்க இணையப் பிரபலங்கள் (Influencers) மூலம் இச்சம்பவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
“நீதிக்காகவும் தமிழீழத் தமிழர்களின் குரலாகவும் தொடர்ந்து ஒலிப்போம்; இனப்படுகொலைக்கு இலங்கை அரசிற்கு எதிராகவும், மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக நிற்போம்” என தமிழ் இளையோர் அமைப்புகள் கூட்டாகத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.







