
பேர்ண்:
சுவிற்சர்லாந்து தமிழ்ச் கல்விச்சேவையின் முத்தமிழ் விழா 2026, கடந்த செப்ரெம்பர் 12 சனிக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள ‘Markthalle, Burgdorf’ மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. காலை 10:00 மணிக்குத் தமிழர்களின் பாரம்பரிய இன்னிய இசையுடன் விழா இனிதே தொடங்கியது.
இதில் தாயகத்தில் இருந்து வருகை தந்த பேராசிரியர்கள், மதகுருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அரங்கை நிறைத்தனர்.
சிறப்புக் கண்காட்சியும் காணொளிகளும்:
இவ்விழாவில் தமிழ்ச் கல்விச்சேவையின் பலதரப்பட்ட செயற்பாடுகளை விளக்கும் விதமாக இளையோர் செயலணியின் பணிகள், வல்லாட்டப் போட்டிகள் மற்றும் தாயகத்தில் ‘பசுமைதேசம்’ திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பனைவிதைகள் நடுகை செய்யும் திட்டம் தொடர்பான காணொளிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், இளையோரின் பங்களிப்புகள் மற்றும் தாயக மக்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ முகாம்கள் குறித்த தகவல்களும் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தன.
விருதுகள் மற்றும் மதிப்பளிப்பும்:
தமிழ்ச் கல்விச்சேவையின் வளர்ச்சிக்கும் கற்பித்தல் பணிகளுக்கும் வழிகாட்டியாக விளங்கும் அறிஞர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கி மாண்பேற்றப்பட்டது:
• யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகைசால் வாழ்நாள் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களுக்கு ‘தமிழ் ஒளி’ விருது வழங்கப்பட்டது.
• யப்பான் கக்சுயின் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வுப் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களுக்கும் ‘தமிழ் ஒளி’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
நீண்டகாலப் சேவை மற்றும் மாணவர் மதிப்பளிப்பு:
2026ஆம் ஆண்டு தமிழ்மொழிக் கல்வியில் ஆண்டு 10 மற்றும் 12இல் சித்திபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
அத்துடன், தமிழ்க்கல்விப் பணியில் 10, 20, 25, மற்றும் 30 ஆண்டுகள் நிறைவு செய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர் :
• 25 ஆண்டுகள் சேவையாற்றிய இணைப்பாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு ‘தமிழ்ச்சுடர்’ சிறப்பு விருது வழங்கப்பட்டது.
• 25 ஆண்டுகள் நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ‘தமிழ்மணி’ விருது வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டது.
ILC பட்டமளிப்பும் சான்றிதழ்களும்:
மொழி பண்பாட்டு நிறுவனத்தின் (ILC) இரண்டாவது தொகுதியினருக்கான பட்டமளிப்பு விழாவும் இதன் போது நடைபெற்றது. மேலும், ILC ஊடாகத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் வெளிநாட்டவர்களுக்குத் தரச்சான்றிதழ்களும், தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் ஆண்டு 10 சித்தியடைந்த மாணவர்களுக்கு B1 சான்றிதழும், ஆண்டு 12 சித்தியடைந்த மாணவர்களுக்கு C1 சான்றிதழும் வழங்கப்பட்டன.
2025இல் உருவாக்கப்பட்ட இளையோர் செயலணியினர் இவ்விழாவின் அனைத்துப் பணிகளையும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து ஆற்றியிருந்தனர். பெரியோர்கள் மற்றும் இளையோரின் ஒருமித்த உழைப்பில் உருவான இம்முத்தமிழ் விழா, எமது மொழி, கலை மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குச் சிறப்பாகக் கையளிக்கும் வரலாற்றுச் செய்தியைப் பறைசாற்றி நிறைவுற்றது.
தகவல்: தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து.






