
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தொழிலாளர் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இலங்கை தொழிலாளர்கள் தாய்லாந்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்தவும் இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் திங்கட்கிழமை (14) இலங்கையின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் Julapun Amornvivat ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
இலங்கை தொழிலாளர்களை தாய்லாந்தில் முறையாக பணியமர்த்துவதற்கும், அவர்களின் உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த ஒப்பந்தங்கள் சட்டரீதியான கட்டமைப்பை வழங்குகின்றன.
தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட கட்டமைப்பின் கீழ் ஆரம்ப கட்டமாக 10,000 இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு தாய்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம்,
- தொழிலாளர் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்
- தொழிலாளர் சந்தை தொடர்பான தகவல்கள்
- திறன் மேம்பாடு
- தொழிலாளர் உற்பத்தித்திறன்
- தொழிலாளர் பாதுகாப்பு
- சட்டவிரோத ஆட்சேர்ப்பு மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பது
உள்ளிட்ட விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் பாதுகாப்பான, ஒழுங்குமுறையான மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் தொழிலாளர் இடம்பெயர்வை ஊக்குவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியமைக்காக தாய்லாந்து அரசுக்கு அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்ததுடன், அவர்களின் உரிமைகள், நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.





