உலகம்

பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் புறப்பட்ட சில நிமிடங்களில் ட்ரோன் தாக்குதல் ; உக்ரைனை அதிர வைத்த ரஷ்யா

உக்ரேன்–போலந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள யஹோடின் ரயில் நிலையப் பகுதியில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் பயணித்த ரயில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீவில் நடைபெற்ற ‘யால்டா ஐரோப்பிய உத்தி’ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தூதுவர்களுக்கான ரயில் மூலம் போலந்து நோக்கிப் பயணித்த உயர்மட்டக் குழுவினரையே குறித்த தாக்குதல் இலக்கு வைத்திருக்கலாம் என உக்ரேனின் ரயில் நிறுவனமான ‘உக்ர்சலிஸ்னிட்சியா’ குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தலினால், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் உள்ளிட்டோர் பயணித்த தூதுவர் ரயில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே யஹோடின் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

அந்த ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே, அதே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலின் இயந்திரத்தின் மீது ரஷ்ய ட்ரோன் ஒன்று மோதி வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இதேவேளை, யஹோடின் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயிலில் அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ பணிப்பாளர் டேவிட் பெட்ரேயஸ் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், அவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

போலந்து எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரேனிய ரயில் இயந்திரத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஏன் தாக்கினார் என்பது தனக்குப் புரியவில்லை என்றும், உக்ரேனிய மக்கள் தினமும் எதிர்கொள்ளும் ‘அர்த்தமற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு’ இது மற்றுமொரு சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரேனுக்குத் தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை மேலைத்தேய நாடுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, “நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வாசற்படியில் புட்டின் நடத்தும் பயங்கரவாதத்தின் ஒலிப்பே இது” என உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எல்லைக்கு மிக அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

நேட்டோ எல்லையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் ஐரோப்பிய பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button