
அரச நிதியை திருடியதாக குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் “எந்த வரம்பும் இல்லை” என தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்க, உரிய நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஊடாக விசாரணைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஞாயிற்றுக்கிழமை (13) கஹட்டகஸ்திகிலியாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், பொருளாதார வளர்ச்சி, விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவர் உரையாற்றினார்.அதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்,
அவரது உரையில் முக்கிய 9 விடயங்கள் வருமாறு
1. ஊழல் தொடர்பான கைதுகளுக்கு வரம்பில்லை
கைதுகளுக்கு வரம்பு விதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அரச நிதியை திருடியதாக குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் “எந்த வரம்பும் இல்லை” என தெரிவித்தார். உரிய நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஊடாக விசாரணைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
2. “பெரிய மனிதரா, அவரது மகனா அல்லது மனைவியா என்பது முக்கியமல்ல”
ஊழல் தொடர்பில் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் தான் தலையிடப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
“அவர் பெரிய மனிதராக இருந்தாலும், அந்த பெரிய மனிதரின் மகனாக இருந்தாலும் அல்லது அவரது மனைவியாக இருந்தாலும் அது எனக்கு முக்கியமல்ல” என அவர் கூறினார்.
விசாரணை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்கு சுயாதீனமும் தேவையான வளங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
3. திருடர்களுக்கு அரசியலில் கதவுகள் மூடப்பட வேண்டும்
பொதுச் சொத்துக்களை திருடுபவர்கள் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கோ அரசியல் தளங்களுக்கோ திரும்பி வராத வகையில் இலங்கையில் அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
“திருடர்களுக்கு அரசியல் கதவுகள் மூடப்படும் எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும்” என அவர் கூறினார்.
4. அநுராதபுர SLPP கூட்டம் தொடர்பில் விமர்சனம்
சனிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களை பாதுகாப்பவர்கள் “சிறிய இனக்குழு போன்ற குழுவினர்” என விமர்சித்தார்.
மேலும், “தந்தை ஜனாதிபதியாக இருந்ததால் மகன் ஜனாதிபதியாக வேண்டும் என்ற கனவு இப்போது முடிவுக்கு வந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.
5. வெளிநாடுகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட 70-க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
6. 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு
இலங்கையிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான, அதாவது சுமார் 300 பில்லியன் ரூபாய் பணம் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இவ்வாறான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள சட்டவிரோத நிதி செயற்பாட்டாளர்களை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
7. 97 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியில் இரண்டு முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள்
கபிதிகொல்லேவ நீர் வழங்கல் திட்டம் 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான செலவில் முன்னெடுக்கப்படுவதாகவும், கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டம் 47 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான செலவில் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
8. மனித–யானை மோதலை சமாளிக்க ஆயிரக்கணக்கான பணியாளர்கள்
மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 3,000-க்கும் மேற்பட்ட வனவிலங்கு உதவியாளர்களை புதிதாக இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், 5,000-க்கும் மேற்பட்ட வனவிலங்கு அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனுடன், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த மேலும் 5,000 பணியாளர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
9. ஜனவரி முதல் புதிய கல்வி முறை
இலங்கை மாணவர்களை உலகின் முன்னணி கல்வி முறைகளுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட கல்வி முறை ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
சுகாதாரத்துறை மற்றும் பொதுப் போக்குவரத்திலும் மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார்.
அரசாங்கத்திற்கு “எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை” என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு ஆதரவளிக்கும் பரந்த மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டங்களின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.





