
கடந்த காலங்களில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகள் போதிய வேகத்தில் முன்னேறவில்லை என்றும், இது எதிர்காலத்தில் நீதியை நிலைநாட்டும் முயற்சிகள் தொடர்பாக கவலைகளை ஏற்படுத்துவதாகவும் Human Rights Watch (HRW)தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1ஆம் திகதி வெளியிடப்பட்ட தனது சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை வழக்குகளை விசாரிப்பதில் அதிக உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும், சர்வதேச அளவிலான பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும் என HRW கேட்டுக்கொண்டுள்ளது.
“நீதியில் உண்மையான அக்கறை இல்லை: கடந்தகால மீறல்களுக்கு வழக்குத் தொடர இலங்கையின் விருப்பமின்மை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட 49 பக்க அறிக்கை, 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் திசாநாயக்க அரசாங்கம் சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ள கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஏழு முக்கிய வழக்குகளை ஆய்வு செய்கிறது.
பல முக்கிய வழக்குகள் இன்னும் முடங்கியுள்ளன
முக்கியமான பல வழக்குகள் இன்னும் முன்னேறாமல் இருப்பதாக HRW தெரிவித்துள்ளது.
அவற்றில்:
- மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
- ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்பட்ட சம்பவங்கள்
- கல்வியாளர்கள் மற்றும் ஏனையோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
போன்றவை அடங்குகின்றன.
அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமை பாதுகாவலர்களும் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.
“கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதை தாமதப்படுத்தியும் மறுத்தும் வந்த கடந்தகால அரசாங்கங்களின் நடைமுறையிலிருந்து திசாநாயக்க நிர்வாகம் விலக வேண்டும்,” என Human Rights Watch-இன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைப் பணிப்பாளர் லூசி மெக்கெர்னன் தெரிவித்துள்ளார்.
கடந்தகால குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
HRW, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட 32 பேர், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை நேர்காணல் செய்ததுடன், நீதிமன்ற ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களையும் விரிவாக ஆய்வு செய்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்
1987–1989 காலப்பகுதியில் தென்னிலங்கையில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கிளர்ச்சியின் போதும், 2009ஆம் ஆண்டு முடிவடைந்த அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கும் இடையிலான உள்நாட்டுப் போரின்போதும், அரச பாதுகாப்புப் படைகளாலும் அரச சார்பற்ற ஆயுதக் குழுக்களாலும் பல்லாயிரக்கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டனர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர் என HRW தெரிவித்துள்ளது.
கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதில் இலங்கை நீண்டகாலமாக தோல்வியடைந்த வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
1990களிலிருந்து அடுத்தடுத்த அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை நியமித்துள்ளன. ஆனால் அவற்றில் எதுவும் குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கு வழிவகுக்கவில்லை. ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனதற்கு என்ன நடந்தது என்பதையும் அவை வெளிப்படுத்தவில்லை.
செம்மணி புதைகுழி
யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள செம்மணியில் உள்ள பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை 582 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக HRW தெரிவித்துள்ளது.
எனினும், உயிரிழந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிவதிலோ அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதிலோ இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை.
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர்,
“புதைகுழிகளை தோண்டி எடுப்பது மட்டும் நீதியை வழங்காது. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்படுவார்களா?”
என கேள்வி எழுப்பியதாக HRW தெரிவித்துள்ளது.
சில முக்கிய வழக்குகளில் முன்னேற்றம்
முன்னைய அரசாங்கங்களால் தடைப்பட்டிருந்த சில முக்கிய விசாரணைகளில் திசாநாயக்க அரசாங்கம் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் HRW குறிப்பிட்டுள்ளது.
அவற்றில்:
- 2009ஆம் ஆண்டு ஊடக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை
- 2010ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்
- 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கடத்தப்பட்டு, பணம் கோருவதற்காக தடுத்து வைக்கப்பட்ட 11 இளைஞர்கள் கடற்படை புலனாய்வு அதிகாரிகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்
ஆகியவை அடங்குகின்றன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் உயர்மட்ட அரசாங்க சதித்திட்டம் தொடர்பான விசாரணையும், ஜனாதிபதி திசாநாயக்க பதவியேற்ற பின்னரே முன்னெடுக்க முடிந்ததாக HRW தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டனர்.
2026 பெப்ரவரி மாதத்தில், தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் இஸ்லாமிய ஆயுதக் குழுவுடன் கூட்டுச் செயல்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சல்லே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், ஜூன் மாதத்தில், இந்தத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் மேலும் இரு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கு இலங்கை நீதிமன்றம் தடை விதித்தது.
இன்னும் பல வழக்குகளில் நடவடிக்கை இல்லை
இருப்பினும், கடுமையான மனித உரிமை மீறல்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவர தேவையான அவசரத்துடன் திசாநாயக்க அரசாங்கம் செயல்படவில்லை என HRW தெரிவித்துள்ளது.
முக்கியமான சில வழக்குகளில் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை. அவற்றில் மூத்த அரச அதிகாரிகள் தொடர்புபட்டதாகக் கூறப்படும் வழக்குகளும் அடங்குகின்றன.
குறிப்பாக 2006ஆம் ஆண்டு ஐந்து தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவமும், பிரெஞ்சு உதவி அமைப்பான Action Contre la Faim-ஐச் சேர்ந்த பெரும்பாலும் தமிழர்களான 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இதில் அடங்கும்.
இந்தக் கொலைகள் இடம்பெற்று 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குத் தொடரப்படுவது கூட நடைபெறவில்லை என HRW தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொறுப்புக்கூறல் திட்டத்தை அரசு ஏற்கவில்லை
கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் உருவாக்கப்பட்ட Sri Lanka Accountability Project-ஐ திசாநாயக்க அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமாக வழக்குத் தொடரும் வகையில் உறுதியளிக்கப்பட்ட Directorate of Public Prosecution அமைப்பையும் அரசு இதுவரை உருவாக்கவில்லை என HRW கூறுகிறது.
அதற்கு பதிலாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (Office on Missing Persons) மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் (Office for Reparations) போன்ற முந்தைய அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு தற்போதைய அரசு ஆதரவளித்துள்ளது.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் பலர் இந்த அமைப்புகளை நிராகரித்துள்ளனர். அவை நீதியை வழங்குவதற்குப் பதிலாக நீதியை மேலும் தாமதப்படுத்துவதற்கான முயற்சிகள் என அவர்கள் கருதுகின்றனர்.
ஐ.நா. தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்
2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, நீதியையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவிப்பதிலும், தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் ஐ.நா. முக்கிய பங்காற்றி வருகிறது.
2011ஆம் ஆண்டு ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையும், 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) இலங்கை தொடர்பான விசாரணையும், உள்நாட்டுப் போரின்போது இரு தரப்பினராலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய கடுமையான மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தின.
மேலும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
திசாநாயக்க அரசாங்கத்தின் நீதிக்கான முன்னேற்றத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் OHCHR-மும் தொடர்ந்து கண்காணித்து, பல தசாப்தங்களாக நீடித்து வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என Human Rights Watch தெரிவித்துள்ளது.
“கடந்தகால மோதல்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான தனது முயற்சிகளை திசாநாயக்க அரசு துரிதப்படுத்த வேண்டும். இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதாக அரசு தெரிவித்துள்ள உறுதிப்பாட்டை நடைமுறையில் நிரூபிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரும், மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளும் வலியுறுத்த வேண்டும்,” என லூசி மெக்கெர்னன் தெரிவித்துள்ளார்.





