
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வலி.வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியேற்றப்பட்ட மக்கள் 36 வருடங்கள் கடந்தும், அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள திரும்ப அனுமதிக்கப்படவில்லை.
குறித்த பகுதிகள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தமது சொந்த காணிகளுக்கு திரும்ப முடியாத நிலையில் , வாடகை வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்களாக தம்மை தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரி போராடி வருகின்றனர்.
இந்நிலையில் வலி. வடக்கை சேர்ந்த மூன்று கிராம மக்கள் தமது காணிகளை விடுக்க கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 10ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பினர்.
அதேவேளை , யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள் குரல் அமைப்பினர் மகஜர் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






