உலகம்

ஹோர்முஸ் நீரிணை திறக்கமாட்டோம்; ஈரான் விடாப்பிடி!

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையே, அப் பகுதியில் ஈரான் மற்றொரு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குற்றம் சாட்டியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள ஈரானும் ஓமானும் புதிய கப்பல் போக்குவரத்து பாதை குறித்த ஒப்பந்தத்தை நெருங்கியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்கா ஈரானுக்கு வழங்கும் நஷ்டஈடு உள்ளிட்ட பிற நிபந்தனைகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பழைய கப்பல் போக்குவரத்துத் திட்டம் இனி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், நிரந்தரப் பாதை குறித்த சட்ட மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை தற்காலிகப் பாதை குறித்து ஓமானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.

நீரிணையின் கட்டுப்பாடு குறித்து எட்டப்படும் ஒப்பந்தம் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும், இது பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற இந்த முக்கிய நீர்வழியில் செல்லும் கப்பல்கள் மீதும், வளைகுடா பகுதியிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற தனது அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவன தொடர்புடைய சரக்குக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button