உலகம்

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய டிரம்ப் – பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் விரைவாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தாக்குதல்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்காக இராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட உடன்பாட்டில், ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக மீண்டும் திறப்பதும், ஈரானின் அணு அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் இடம்பெறும் என டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும், ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். எனினும், அத்தகைய உடன்பாடு எட்டப்பட்டதாக ஈரான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க இராணுவம் “முழுமையாக தயார்நிலையில் (Locked and Loaded)” இருப்பதாகக் கூறிய டிரம்ப், இருப்பினும் இராஜதந்திர தீர்வுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தாக்குதலை ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, அமெரிக்கா பதற்றத்தை அதிகரித்து வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டியதுடன், மோதல் விரிவடைந்தால் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நாடுகளும் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தது.

இதேவேளை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பதற்றம் அதிகரித்தால் விமான சேவைகள் ரத்து செய்யப்படுதல், வான்வெளி மூடப்படுதல் உள்ளிட்ட பயண இடையூறுகளுக்கு தயாராக இருக்குமாறும் அமெரிக்க அரசு பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button