
தென்னிலங்கையில் மீண்டும் அடுத்தடுத்து துணிகரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமையால் மக்கள் மத்தியில் மீண்டும் பதட்டம் நிலவியுள்ளது.
இந்த வருட நடப்பாண்டில் சுமார் 15 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், கொழும்பு தெமட்டகொட, குப்பியாவத்தை மயானம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் CCTV காட்சிகள் ஊடகங்களில் இன்று வெளியாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
காட்சிகளில், துப்பாக்கிதாரிகளில் ஒருவர் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுடுவதும், பின்னர் காயமடைந்த ஒருவரை பட்டப்பகலில் பிரதான சாலையில் துரத்திச் செல்வதும் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின்னர், தாக்குதலாளர்கள் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக தப்பிச் சென்றதும் CCTV-யில் காணப்படுகிறது.
இதேவளை வத்தளை, கதிரான பள்ளியாவத்த பகுதியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான போதைப்பொருள் வர்த்தகராக கருதப்படும் ‘மட்டக்குளிய குடு ரொஷான்’ என்பவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரொஷான் என்பவரின் சகோதரர் ஒருவரின் பிள்ளையின் பிறந்தநாள் விருந்தின் போது, நேற்று இரவு 9.40 மணியளவில் காரில் வந்த நபர் ஒருவர் தலைக்கவசம் அணிந்து கொண்டு குறித்த மண்டபத்திற்குள் நுழைந்து, குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
எனினும், இலக்கு தவறியதால் ரொஷானுக்கு அருகில் இருந்த நபர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கைத்துப்பாக்கி வகையைச் சேர்ந்த துப்பாக்கியாலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் எனக் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





