இலங்கை

ஈழத்து மூத்த பெண் படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமாருக்குச் சிறப்பு மதிப்பளிப்பு!

சுவிற்சர்லாந்தின் சுக் (Zug) மாநிலத்தில் பன்னாட்டு பண்பாட்டு மன்றமாக இயங்கிவரும் ‘FRW Interkultural Dialog’ தன்னார்வ சங்கத்தின் வருடாந்த கோடைவிழா அண்மையில் (27.06.2026) சென்ற் மார்ட்டின் திருச்சபை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகி றெகுலா கிறீன்பெல்டர் (Regula Grünenfelder) தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைப்பின் உருவாக்குநரும் கௌரவ உறுப்பினருமான திருமதி ஏவா விம்மர் (Eva Wimmer) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பன்னாட்டு உறுப்பினர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பலமொழி கிராமிய இசைப்பாடல்கள், புல்லாங்குழல் இசை மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

தமிழ்ப் பண்பாட்டின் பெருமை முழங்கிய உரை

இந்நிகழ்வில், தமிழர்களின் பண்பாடு மற்றும் இம்மன்றத்தினூடான உறவுநிலை குறித்து ஈழத்து மூத்த பெண் படைப்பாளியான திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் ஜேர்மன் மொழியில் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், “தமிழ் எங்களுக்கு வெறுமனே ஒரு மொழி மட்டுமல்ல, அது எமது இனத்தின் அடையாளம். 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்ப் பண்பாட்டின் முதன்மையான விழுமியம் விருந்தோம்பலாகும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற அடிப்படையில் அனைத்து மனிதர்களும் ஒன்றே என்ற பரந்த சிந்தனையை உள்ளடக்கியதே தமிழர்களின் பண்பாடு” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பாராட்டும் மதிப்பளிப்பும்:

புலம்பெயர் சூழலில் தமிழ் மக்களின் வாழ்வியல் பயணத்திற்குச் சான்றாக விளங்கும் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார், 2014ஆம் ஆண்டு முதல் இந்த FRW நிறுவனத்துடன் இணைந்து பயணித்து வருகிறார். இங்கு ஜேர்மன் மொழியை ஆரம்ப நிலையிலிருந்து கற்று, குழந்தைகள் விளையாட்டுக் குழுக்களை வழிநடத்துவதற்கான ‘டிப்ளோமா’ தகைமையைப் பெற்றவர். கடந்த 12 வருடங்களாகக் குழந்தைகள் பராமரிப்பாளர், ஜேர்மன் மொழிக் கற்றல் பயிற்சியாளர் மற்றும் குழந்தைகளுக்கான கதைசொல்லி எனப் பல தளங்களில் இவர் ஆற்றிவரும் சமூகப் பணி உற்றுநோக்கத்தக்கது.
இவரது இந்த அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி, FRW அமைப்பின் உருவாக்குநர் திருமதி ஏவா விம்மர், ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களுக்கு மாலை மற்றும் பொன்னாடை (சால்வை) அணிவித்துச் சிறப்பு மதிப்பளிப்பைச் செய்தார்.

விழாவின் நிறைவாக, வருகை தந்திருந்த அனைவருக்கும் பாரம்பரியத் தமிழ் உணவு வகைகள் பரிமாறப்பட்டதுடன், பன்னாட்டு உறவுகளுடனான சுமுகமான கலந்துரையாடல்களுடன் விழா இனிதே நிறைவுற்றது.

#TamilCulture #EelamWriter
#TamilWriters #WomenAchievers
#SwissTamilInfo #SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #விடுதலைFM

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button