
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் யாஸ்திகா பாட்டியா படைத்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 457 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் அந்த அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா, இங்கிலாந்தை நான்காவது நாளிலேயே 270 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இது இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியிருந்தது.
ஆனால், லார்ட்ஸில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டி பல்வேறு சாதனைகளுக்காகவும் நினைவுகூரப்படும்.
ஆண்கள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் 1884 ஜூலை 21 முதல் 23 வரை நடைபெற்றது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஆண்கள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்ற 142 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் யாஸ்திகா பாட்டியா லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சாதனை படைத்தார். அதேபோல், கிராந்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்தார்.





