இலங்கைஉலகம்தமிழீழம்தமிழ்

75 ஆண்டுகளின் பின் உருவாகும் சூப்பர் ‘எல்நினோ’ ; மிக வலுவான உருவாக்கம் உறுதி!

2026/2027 எல்நினோ நிகழ்வவைப் பொறுத்தவரை நேற்று வெள்ளிக்கிழமை  மிக முக்கியமான ஒரு நாள். ஏனெனில் பசுபிக்கின் எல்நினோ குறிகாட்டி 3.4 பிராந்தியத்தில் நேற்றைய தினம் வெப்பநிலை 1.44 பாகை செல்சியஸ் என்ற வகையில் அதிகரித்துள்ளது.
அயனப் பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்திலிருந்து சமுத்திர வெப்பநிலை ஆபிரிக்கா மற்றும் இந்துசமுத்திரப் பிராந்தியம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்த பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, அந்தவகையில் மிக வலுவான எல்நினோவின் உருவாக்கம் உறுதியாகியுள்ளது. கடந்த 1876ம் ஆண்டின் பின் உருவாகும் சூப்பர் எல்நினோ இதுவாகும் என தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 75 ஆண்டுகளில் இது 7வது எல்நினோ நிகழ்வு ஆனால் முதலாவது சூப்பர் எல்நினோ ஆகும். உருவாகியுள்ள சூப்பர் எல்நினோ இலங்கைக்கு வரட்சி மற்றும் வெள்ளம் என இருவகையான பாதிப்புக்களையும் உருவாக்கும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட இலங்கைக்கு ஜுலை மாதம் முதல் செப்டம்பர் வரை அதிக சமுத்திர மற்றும் நில வளிமண்டல வெப்பநிலை ± 2.5 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மிக அதிக, செறிவான மழைவீழ்ச்சி மிகக் குறுகிய நாட்களில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் வெள்ள அனர்த்த நிகழ்வுகள் பெரும் பாதிப்புக்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது.
மீண்டும் 2026 டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதி முதல் 2027 ஜுன் வரை அதிக வெப்பநிலை ± 3.2 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் ஆரம்பம் முதல் 2027 ஜுன் மாதத்தின் இறுதிவரை இலங்கையின் விவசாயம் மற்றும் மீன்பிடிச் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.
இலங்கை ஒன்றுக்கொன்று முரணான, ஆனால் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இரண்டு வேறுபட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஜுலை மாதமே அதிகூடிய வெப்பநிலை (Hotest Month)கிடைக்கும் மாதம். ஆனால் இவ்வாண்டு ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்கள் அதிகூடிய வெப்பநிலை மாதங்களாக இருக்கும். அதேவேளை கனமழை கிடைத்து வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் இவ்வாண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் அதிகூடிய சமுத்திர வெப்பநிலை மற்றும் நில வளி வெப்பநிலை மிக மிக உயர்வாக இருக்கும்.
 இம்முறை தென்மேற்கு பருவக்காற்று மூலம் இலங்கைக்கு கிடைக்கும் மழையின் சராசரியின் 60 முதல் 70 வீதமே கிடைக்க வாய்ப்புள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கடந்த 60 நாட்களில் சராசரியாக 12 மி.மீ. மழையே கிடைத்துள்ளது. ஆனால் இந்த 60 நாட்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சராசரியாக 287 மி.மீ ஆவியாக்கம் நிகழ்ந்துள்ளது. இக்காலப்பகுதியில் அதிக வெப்பநிலை இல்லையாயினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது வீசுகின்ற வரண்ட தென்மேற்கு பருவக்காற்று அதிக ஆவியாக்கத்தைத் தூண்டியுள்ளது. தற்போது அதிக வெப்பநிலையும் கிடைக்க தொடங்கியுள்ளது. எல்நினோவும் உச்சமடையவுள்ளது.
எல்நினோ ஒரு இயற்கையான நிகழ்வு. இதனை நாம் தடுக்க முடியாது. ஆனால் போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் திட்டமிட்ட தயார்ப்படுத்தல்கள் மூலம் இதனை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.என தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button