
தென்னாப்பிரிக்க தேசிய கால்பந்து அணியின் நடுகள வீரரான ஜெய்டன் ஆடம்ஸ் தனது 25ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் கேய்டன் மெக்கென்சி இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜெய்டன் ஆடம்ஸின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளேன். அவர் தென்னாப்பிரிக்க கால்பந்தின் மிகவும் பிரகாசமான இளம் திறமையாளர்களில் ஒருவர்”என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆடம்ஸின் மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. கேப் டவுன் நகரின் மத்திய பகுதியில் உள்ள ஸ்காட்ச்செக்லூஃப் (Schotschekloof) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 25 வயதுடைய ஒருவரின் சடலம் சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடிய ஆடம்ஸ், குழுநிலைப் போட்டிகள் மூன்றிலும் களமிறங்கினார். ஆனால், கனடாவுக்கு எதிரான 16 அணிகள் சுற்றுப் போட்டியில்அவர் விளையாடவில்லை.
கேப் டவுனில் பிறந்த ஜெய்டன் ஆடம்ஸ், தனது தொழில்முறை கால்பந்து பயணத்தை ஸ்டெல்லன்போஷ் எஃப்சி (Stellenbosch FC) அணியில் தொடங்கினார். பின்னர், 2025 ஜனவரியில் CAF சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்களான மமேலோடி சண்டவுன்ஸ் (Mamelodi Sundowns) அணியில் இணைந்தார்.
அவரது மரணம், அவரது பாட்டி உயிரிழந்த ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே நிகழ்ந்துள்ளது. செக்கியாவுக்கு எதிரான உலகக் கோப்பை குழுநிலைப் போட்டிக்கு முந்தைய நாளே அவரது பாட்டி காலமானார். தனிப்பட்ட துயரத்திலும், அந்தப் போட்டியில் களமிறங்கி தனது நாட்டுக்காக அவர் விளையாடியிருந்தார்.
ஜெய்டன் ஆடம்ஸின் மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.





