
கிரேக்கத்தின் தெசலோனிக்கி நகரிலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கி வெள்ளிக்கிழமை புறப்பட்ட ரயன்ஏர் (Ryanair) விமானம், நடுவானில் கேபின் ஜன்னல் ஒன்று கழன்றதால் அவசரமாக மீண்டும் தெசலோனிக்கி விமான நிலையத்திற்குத் திரும்பியது.
மால்டா ஏர் (Malta Air) இயக்கிய இந்த விமானத்தில் பயணித்தவர்கள் கூறுகையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஜன்னல் வழியாக தோள்பட்டை வரை வெளியே இழுக்கப்பட்டதாகவும், அருகிலிருந்த பயணிகள் அவரை பிடித்து மீண்டும் விமானத்துக்குள் இழுத்ததாகவும் தெரிவித்தனர்.
கேபினில் திடீர் காற்றழுத்தக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆக்ஸிஜன் முகக்கவசங்கள் தானாகவே கீழிறங்கினஎன்றும் பயணிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய ரயன்ஏர், “பயணிகள் அமரும் பகுதியின் ஜன்னல் ஒன்று பறக்கும் போது கழன்றதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானம் தெசலோனிக்கிக்குத் திரும்பியது” என்று தெரிவித்தது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், ஒரு பயணிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும், பின்னர் பயணிகளை இலக்கை அடைய மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஐரிஷ் விமானப் போக்குவரத்து ஆணையம், கிரேக்க மற்றும் மால்டா விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளது. ஜன்னல் எவ்வாறு கழன்றது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை





