
இந்தோனேஷியாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமபனன் கோவிலை(சிவன் கோவில்) புனரமைக்கும் பணிக்கு இந்தியா உதவி செய்யவுள்ளதுடன் இதற்கான பணியை நாளை பிரதமர் மோடியும் இந்தோனேஷியா அதிபரும் துவக்கி வைக்கவுள்ளனர்.
இந்தோனேஷியாவின் தெற்கு ஜாவாவில் உள்ள யோககர்த்தா நகரில் இருந்து 17 கி.மீ., தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில். இந்தோனேஷியாவின் மிகப்பெரிய ஹிந்து கோவிலாகவும், கம்போடியாவின் அங்கோர் வாட்க்கு பிறகு ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கோவில் ஆகும்.
இங்கு 240 கோயில்கள் அமைந்துள்ளன. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோவிலின் மைய விமானம் 154 அடி உயரத்தில் உள்ளது. முதலில் சிவனுக்காக கட்டப்பட்ட இக்கோவில் வடக்கு பகுதியில் பிரம்மாவுக்கும், தெற்கு பகுதியில் விஷ்ணுவுக்கும் கோவில் உள்ளது.பழமையானதும், உயரமானதுமாக சிவன் கோவில் உள்ளது. இதன்சுற்று பிராகரத்தில் ராமாயண காட்சிகள் செதுக்கப்பட்டு உள்ளன.யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11ம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், 2006 ஆம் ஆண்டு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இக்கோவில் பாதிப்பு அடைந்துள்ளது.
இந்நிலையில், இக்கோவில் புனரமைப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதற்கான பணிகளை நாளை பிரதமர் மோடியும், இந்தோனேஷியா அதிபர் பிரபோவ் சுபியான்டோவும் இணைந்து துவக்கி வைக்கவுள்ளனர்.0
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: யோக்யார்த்தாவில் பிரம்பனன் கோவிலை புனரமைக்கும் பணியை அதிபர் சுபியான்டோவுடன் இணைந்து துவக்கி வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. ஆயரம் ஆண்டுகளுக்கு மேலாக, இக்கோவில் இரு நாடுகளில் கலாசார பாரம்பரியத்தின் சின்னமாக நிற்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புனரமைப்புப் பணியில் இந்தோனேஷியா அதிகாரிகளுடன் இணைந்து, இந்திய தொல்லியல் துறையும் செயல்பட உள்ளது.





