அரசியல்உலகம்சர்வதேசம்

சமரசத்துக்கு தயாரான ட்ரம்ப் – நெதன்யாகு; அமெரிக்காவில் விரைவில் சந்திப்பு!

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்த குழப்பங்களுக்கு மத்தியில், விரைவில் இருவரும் அமெரிக்காவில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்டுள்ளனர்

நேற்று வெள்ளிக்கிழமை இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா நிறுவப்பட்டதன் 250ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வொஷிங்டன் மற்றும் ஜெருசலேம் நகரங்களுக்கு இடையிலான நெருக்கமான உறவையும் பாராட்டியுள்ளார்.

இதன்போது, உலகின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அமெரிக்காவே என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான பலமான பிணைப்பை இஸ்ரேல் பெரிதும் மதிப்பதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும், இவர்களது சந்திப்பு இடம்பெறவுள்ள திகதி அல்லது இடம் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஈரான் மற்றும் பிராந்திய பதற்ற தணிப்பு முயற்சிகள் தொடர்பாக, கடந்த சில வாரங்களாக ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்தத் தொலைபேசி அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறிப்பாக, லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மூலோபாயம் வலுவாக உள்ளதாகவும், பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்படுவதாகவும் இருதரப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

விரைவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் போது, ஈரானின் தற்போதைய நிலவரங்கள், காசா மோதல், பிராந்திய பாதுகாப்பு மற்றும் தற்போதைய இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு இந்த சந்திப்பு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button