இலங்கை

இலங்கையில் அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தம்

உலக சந்தையின் எரிபொருள் விலைகளுக்கு அமைவாக, இலங்கையில் எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின்போது விலைக்குறைப்பு ஒன்றை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது எரிபொருள் விலைகளில் ஓரளவு குறைவு தென்பட்டாலும், மத்திய கிழக்கு போருக்கு முன்னர் உலக சந்தையில் காணப்பட்ட எரிபொருள் விலைகளை விட தற்போதைய விலைகள் இன்னும் உயர்வாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், உலக சந்தையின் இன்றைய எரிபொருள் விலை இன்றைய பிற்பகல் அளவில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், அதற்கமைய அந்த நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே உள்நாட்டு எரிபொருள் விலை குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

எனினும், எரிபொருள் விலைகள் தொடர்பாக இதுவரை எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், விலை திருத்தம் குறித்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்த அவர், எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படுமா அல்லது தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படுமா என்பது அந்த பேச்சுவார்த்தைகளின்போதே தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.

அதேநேரம், நேற்று வியாழக்கிழமை (28) இலங்கைக்கு WTI ரக மசகு எண்ணெய் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளதாகவும், அதில் 89,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்வரும் 31ஆம் திகதியளவில் மீண்டும் மர்பன் ரக மசகு எண்ணெய் கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதுடன், அதில் 95,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

4ஆம் மற்றும் 3ஆம் மாதங்களில் உலக சந்தையில் மிக அதிக விலை காணப்பட்டது. ஆனால், தற்போது இந்த விலை சற்றே குறைவடைந்துள்ளது.

எனினும், போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், உலக சந்தையில் இன்னும் அதிக விலையிலேயே நிலவுகிறது. எனவே, இந்த மாதத்திலோ அல்லது அடுத்த மாதத்திலோ விலை குறைப்பு எதுவும் ஏற்படாது என்பதை தெளிவாகக் கூற முடியும்.

பெரும்பாலும் செப்டம்பர் மாதம் வரை விலைக்குறைப்பை எதிர்பார்க்க முடியாது. ஆனால் விலை அதிகரிப்பு இருக்குமா என்பதை இந்த நேரத்தில் எம்மால் கூற முடியாது. நாம் அது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

இன்று மாலை தான் சர்வதேச விலை விபரங்கள் வெளியாகும். அந்த விலையையும் பார்த்துவிட்டு, பொதுவாக நாம் 31ஆம் திகதியே புதிய விலையை அறிவிப்போம். ஆனால் இம்முறை 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்றைய நாளுக்குரிய உலக சந்தை எண்ணெய் விலை இன்று மாலை வெளியாகும் போது, அவை அனைத்தையும் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.

எனினும் இது தொடர்பாக இன்னும் விசேட பேச்சுவார்த்தைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். அதனால் இந்த நேரத்தில் எதையும் கூற முடியாது. ஆனால் தெளிவாகவே விலைக்குறைப்பு ஒன்று ஏற்படப் போவதில்லை.

சிலவேளை இந்த விலையிலேயே நீடிக்குமா அல்லது சிறிய அதிகரிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராய வேண்டும். எனினும், தெளிவாகவே பெரிய அளவிலான விலை அதிகரிப்பு எதுவும் ஏற்படாது. எனவே இது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button