
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான போர் நிலவரம் குறித்து தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார்.
இந்த உரையாடலைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் இன்று மாலை வரையறுக்கப்பட்ட பாதுகாப்புப் உயர்மட்டக் குழு விவாதத்தை கூட்டவுள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் இஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளது
அமெரிக்காவும், இஸ்ரேலும், ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவதற்குத் தயாராகி வருவதாக வெளியாகி வரும் செய்திகளுக்கு மத்தியில் இந்த இருதரப்பு உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் புதுப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய சீனப் பயணம் குறித்தும் இரண்டு தலைவர்களும் கலந்துரையாடியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவை இலக்கு வைத்து, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதிக்கு பின்னர் யுக்ரைன் முன்னெடுத்த மிகப்பாரிய இரவு நேர ஆளில்லாத் தாக்குதல் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மொஸ்கோவில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட யுக்ரைனிய ஆளில்லாத வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.





