இலங்கை

இந்தியாவின் 450 மில்லியன் டொலர் நிவாரணப் பொதியை துரிதப்படுத்த இணக்கம்

கடந்த ஆண்டு இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிப் பொதியை துரிதமாக நடைமுறைப்படுத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இது குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், “450 மில்லியன் டொலர் பெறுமதியான டிட்வா சூறாவளிக்குப் பின்னரான மறுசீரமைப்புப் பொதியை அமுல்படுத்துவதை துரிதப்படுத்த இணக்கம் காணப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளி காரணமாக 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதோடு, 640க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகின.

 

இதன்போது இலங்கைக்கு முதன்முதலில் உதவிய நாடாக இந்தியா, நவம்பர் 28 அன்று சாகர் பந்து எனும் நிவாரணச் சேவையை ஆரம்பித்தது.

 

இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 23ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இந்த 450 மில்லியன் டொலர் நிவாரணப் பொதியை அறிவித்தார்.

 

இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர்: சலுகை அடிப்படையிலான கடன் வசதி மற்றும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடைகள் உள்ளடங்குகின்றன.

 

இந்தச் சந்திப்பின் போது, தற்போது இலங்கையில் நடைமுறையிலுள்ள ஏனைய இருதரப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது. குறிப்பாக வீடமைப்பு, சுகாதாரம், நீர் வழங்கல், உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பல இந்தியத் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

அத்துடன், நவீன நிதிச் சட்டகங்கள் மற்றும் சைபர் பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கருத்துப் பரிமாறப்பட்டதாக உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button