இலங்கை

யாழ். போதனா மருத்துவமனையில் பாரிய தீ விபத்து: 60 சதவீத மருந்துகள் எரிந்து சாம்பல்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், அங்கிருந்த மருந்துகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளன.

 

நேற்று (09) ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினை அடுத்து, இன்று அந்தப் பகுதியைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மருத்துவமனையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருமான ச.சிறிபவானந்தராசா ஊடகங்களுக்கு இது குறித்துத் தெளிவுபடுத்தினார்.

தீயில் எரிந்த மருந்துகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான, பெறுமதிமிக்க மருந்துகள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், மருத்துவமனையின் உள்ளக மருந்தகத்தில் தற்போதுள்ள மருந்துகளைக் கொண்டு அவசரத் தேவைகளைச் சமாளிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

 

மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்:

 

மாவட்டத்திலுள்ள ஏனைய மருத்துவமனைகள் மற்றும் வவுனியா, அநுராதபுரம் வைத்தியசாலைகளில் இருந்து மருந்துகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பில் இருந்தும் உடனடியாக மருந்துகளைக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

வெளிநோயாளர் பிரிவு மற்றும் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்குத் தடைகளின்றி மருந்துகளை வழங்க இப்போதைக்குச் சிக்கல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராய, கொழும்பில் இருந்து அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை (11.05.2026) யாழ்ப்பாணம் வரவுள்ளனர்.

 

அதுவரை குறித்த களஞ்சியசாலை பகுதி காவல்துறையினரின் முழுமையான பாதுகாப்பில் இருக்கும் எனவும், விசாரணைகளின் பின்னரே சேதமடைந்த மருந்துகள் அங்கிருந்து அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button