
இந்திய அரசியலில் ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டு, சிறிது காலத்திலேயே மக்களின் பேராதரவை பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தொடர்ந்து விஜய் இப்போது அந்த சாதனையை படைத்து இருக்கிறார்.
தி.மு.க.வில் இருந்து விலகி 1972 இல் அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர், 1977 ஆம் ஆண்டு தனது பொதுத்தேர்தலை சந்தித்தார். அதில் அ.தி.மு.க. 155 தொகுதிகளில் போட்டியிட்டு, 130 வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மொத்தம் 30.36 சதவீத வாக்குகளைப் பெற்றது.
ஆந்திர அரசியலில் 1983 இல் நடைபெற்ற மாற்றம் இந்தியாவையே உலுக்கியது. கட்சி தொடங்கிய 9 மாதங்களிலேயே என்.டி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். அவரது தெலுங்கு தேச கட்சி 289 தொகுதிகளில் போட்டி, 201 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் 46.30 சதவீதம் வாக்குகளைக் குவித்து காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்தது.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக 2012 இல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலாகக் களம் கண்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28 இல் வென்றது. மொத்தம் 29.49 சதவீத வாக்குகளை பெற்றது. அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத போதிலும், காங்கிரசின் வெளிப்படையான ஆதரவுடன் முதல் தேர்தலிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அந்த பட்டியலில் 4 ஆவது விஜய் இடம் பிடித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு கட்சி தொடங்கி விஜய், 2 ஆண்டுகளில் தனது முதல் சட்டசபை தேர்தலிலேயே 233 தொகுதிகளில் தனித்து களம் கண்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ளது. பெரம்பூரில் 53,715 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கில் 27,416 வாக்குகள் வித்தியாசத்திலும் தவெக தலைவர் விஜய் வெற்றிவாகை சூடி உள்ளார்.
தமிழ்நாட்டில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட த.வெ.க. 34.92 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். 24.19 சதவீத வாக்குகளுடன் தி.மு.க. 2 ஆவது இடத்திலும், 21.21 சதவீத வாக்குகளுடன் அ.தி.மு.க. 3 ஆவது இடத்திலும் உள்ளன.





